கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியதால் திருச்சியில் காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியதால் திருச்சியில் காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-07-03 05:36 GMT
திருச்சி, 

திருச்சி இ.பி.ரோடு மதுரம் மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை விலையில் காய்கறிகள் விற்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்குள்ள வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 50 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியது. இதன் காரணமாக மதுரம் மைதானத்துக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களின் கூட்டம் குறைந்தது. இதனால், போதிய வியாபாரமின்றி வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுபற்றி விசாரித்தபோது, வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா இருப்பதாக தகவல் பரவியதே காரணம் என தெரியவந்தது. இதனால் வியாபாரிகள் ஆத்திரம் அடைந்தனர். பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே கொரோனா தொற்று உள்ளதாக தகவல் பரவியதை கண்டித்து திருச்சி இ.பி.ரோட்டில் நேற்று காலை வியாபாரிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்