கொரோனா சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவ முறையை விரிவுபடுத்த நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்

சென்னையில் உள்ள கொரோனா மையங்களில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

Update: 2020-07-03 23:40 GMT
சென்னை,

சென்னை சாலிகிராமம் அபுசாலி தெருவில் உள்ள ஜவஹர் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று வந்த 234 நபர்களில் 30 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். அவர்களை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வழியனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் உள்ள கொரோனா மையங்களில் சுகாதாரத்துறையினருடன் இணைந்து கூடுதலான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய திட்டமிட்டு வருகிறது. இது போன்ற மையங்களில் ஆங்கில மருத்துவத்துடன் சேர்த்து சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவ முறை நல்ல பலனை கொடுப்பதால், மேலும் பல மையங்களில் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இங்கு அமைக்கப்பட்டு உள்ள சித்த மருத்துவ கொரோனா மையத்தில் இதுவரை 744 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 539 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 14 நாட்கள் முடிந்ததும், அவர்களும் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவோர் பட்டியலில் இணைக்கப்படுகின்றனர். சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 58 சதவீதம் பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மழைக்காலம் தொடங்கி உள்ளதால் டெங்கு தடுப்பு பணியில் 3 ஆயிரத்து 500 களப்பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். அந்த பணியும் தொடங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார துணை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர், சித்த மருத்துவர் கே.வீரபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்