கோவில் முன்பு கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தையை தத்து மையத்தில் ஒப்படைத்த கலெக்டர்

கோவில் முன்பு கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தையை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தத்து மையத்தில் ஒப்படைத்தார்.

Update: 2020-07-04 00:20 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர், நரசமங்கலம் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் முன்பு கடந்த மாதம் 28-ந் தேதியன்று பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரற்று கிடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைக்கண்ட உடனே, அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தை நலமான நிலையில், தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலெக்டர் அலுவலகத்துக்கு குழந்தையை கொண்டு வர உத்தரவிட்டார்.

அங்கு அந்த பச்சிளம் பெண் குழந்தையை பெற்று கொண்ட கலெக்டர், அக்குழந்தைக்கு நாகமணி என பெயர் சூட்டினார். அதைத்தொடர்ந்து, பெண் குழந்தையை குழந்தைகள் சிறப்பு தத்து மையத்தில் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில், அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செந்தில், குழந்தைகள் நலக்குழு தலைவர் வனஜா முரளிதரன் உள்ளிடோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்