பட்டதாரி பெண் சாவில் மர்மம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் போடியில் பரபரப்பு

போடியில் பட்டதாரி பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-04 00:42 GMT
போடி,

போடி கே.எம்.எஸ். லேஅவுட் வெங்கடாசலபதி கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் பாலகணேஷ் (வயது 29). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் போடி சவுண்டம்மன் கோவில் பூக்கார தெருவை சேர்ந்த பட்டதாரியான லிங்கேஸ்வரிக்கும் (25) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. லிங்கேஸ்வரிக்கும், மாமியார் சங்கரேஸ்வரிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் லிங்கேஸ்வரி வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் போடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே லிங்கேஸ்வரியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். மேலும் லிங்கேஸ்வரி சாவதற்கு முன்பு எழுதி உள்ள கடிதத்தில் தற்கொலை செய்வதற்கான காரணங்களை கூறி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உறவினர்கள் நேற்று மதியம் 2 மணியில் இருந்து சுமார் 2 மணிநேரம் போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவமனை முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், தாசில்தார் மணிமாறன் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். அதன்பேரில் உறவினர்கள் மறியலை கைவிட்டனர். சாலைமறியல் காரணமாக போடியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்