கரூர் காந்திகிராமத்தில் 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு பட்டப்பகலில் மர்மநபர்கள் கைவரிசை

கரூர் காந்திகிராமத்தில், பட்டப்பகலில் 2 இடங்களில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-07-04 05:56 GMT
கரூர், 

கரூர் காந்திகிராமம் ராஜாநகரை சேர்ந்தவர் ராஜாத்தி (வயது 52). இவர் வணிகவரித்துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்றுகாலை வழக்கம்போல், வீட்டை பூட்டி விட்டு, ராஜாத்தி வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ஒரு பீரோவில் வைத்திருந்த மோதிரம், தோடு உள்ளிட்ட 2 பவுன் தங்கநகைகள், ரூ.11 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள காந்திகிராமம், இந்திராநகர் ரமணாகார்டன் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமசாமியும் (50), நேற்று வீட்டை பூட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் மாலை வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ½ பவுன் தங்கநகை, ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து 2 பேரும் தனித்தனியாக தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து, 2 வீடுகளிலும் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கரூர் காந்திகிராமம் குடியிருப்பு நிறைந்த பகுதியாகும். இருப்பினும் பகல் நேரத்தில் துணிச்சலுடன் பணம்-நகை திருடப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்