திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-05 05:54 GMT
திருப்பூர், 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

198 ஆக உயர்வு

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வெளிபகுதிகளில் இருந்து வருகிறவர்கள் மூலம் இந்த கொரோனா தொற்று அதிகமாக இருந்து வருகிறது. அவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் இருந்து திருப்பூருக்கு வந்த ரங்கநாதபுரம் ஜெய்நகரை சேர்ந்த 66 வயது பெண் மற்றும் இடுவம்பாளையத்தை சேர்ந்த 59 வயது பெண் ஆகிய 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக இருந்தது. இதில் ஒருவர் வேறுமாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது பாதிப்பு கணக்கு அந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் திருப்பூர் மாவட்ட பாதிப்பு 196 ஆக இருந்தது. மேலும், 2 பேருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டதால், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்