பெரம்பலூர், அரியலூரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 2-வது முழு ஊரடங்கு - சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன

பெரம்பலூர், அரியலூரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 2-வது முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதையடுத்து கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-07-13 06:51 GMT
பெரம்பலூர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்காக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. நேற்று ஜூலை மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு நேற்று காலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை கடைப்பிடிக்கப்பட்டது.

முழு ஊரடங்கில் திறக்க அனுமதிக்கப்பட்ட பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் வழக்கம் போல் இயங்கின. துய்மை பணியாளர்கள் நேற்றும் வழக்கம் போல் தூய்மை பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கினால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்கள் முழுவதும் காய்கறி கடைகள், சிறிய, பெரிய மளிகை கடைகள், பழக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள், இறைச்சி கடைகள் என அனைத்தும் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் பகுதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடினர்.

முழு ஊரடங்கினால் வாகனங்கள் செல்லாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட எல்லைகளில் போலீசார் சோதனை பணியிலும் மற்றும் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

அப்போது தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின், வாகனங்களை பறிமுதல் செய்ததோடு போலீசார் குற்ற வழக்குப்பதிவு செய்தனர். முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதித்தனர்.

முழு ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்திருந்ததால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்