கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-07-17 00:05 GMT
சென்னை,  

தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தின் சமையல்காரருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவரை தொடர்ந்து காப்பகத்தின் இயக்குனர், 3 முதுகலை மருத்துவ மாணவர்கள், 2 காப்பாளர்கள், 26 நோயாளிகள் என்று அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்று பரவியது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி உள்ளது என்று டாக்டர்களிடம் தெரிவிக்க தெரியாது.

எனவே, அங்கு உள்ள நோயாளிகள், டாக்டர்கள், நர்சுகள், சமையல்காரர்கள் உள்பட அனைவரும் பரிசோதனை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

ஒரு வாரத்துக்குள்...

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், ‘மனுதாரர் தரப்பு வாதத்தை மறுக்க முடியாது, காப்பகத்தில் உள்ளவர்களை மதிக்க வேண்டும். மனநல காப்பகத்தில் சிகிச்சையில் உள்ள 800 பேருக்கு மட்டுமல்லாமல், டாக்டர்கள், நர்சுகள், வார்டன்கள், சமையல்காரர்கள் என அனைவருக்கும் பி.சி.ஆர். என்ற கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை ஒருவாரத்துக்குள் செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் முடிவை பொறுத்து எந்த ஆஸ்பத்திரிகளில் அவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை அரசு முடிவெடுக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்