சுருக்குமடிவலை விவகாரம்: பேச்சுவார்த்தை மூலம் இறுதி முடிவு எடுக்கும் வரை அரசுக்கு ஆதரவு

சுருக்குமடிவலை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் இறுதி முடிவு எடுக்கும் வரை அரசுக்கு ஆதரவு அளிப்பது என்று 48 மீனவ கிராம பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2020-07-17 01:57 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சுருக்குமடி வலையை தடைசெய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினரும், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நாகை மாவட்டத்தில் மீனவ கிராமங்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் நாகை அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் சுருக்குமடி வலைகளை தடை செய்யலாமா? அல்லது பயன்படுத்தலாமா? என்பது குறித்து நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், விழுந்தமாவடி, வேளாங்கண்ணி, கோட்டுச்சேரி, மரத்துகுப்பம் மற்றும் காரைக்கால் உள்பட 48 மீனவ கிராம பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக தமிழக மீன்வளத்துறை மற்றும் மீனவர்கள் பேச்சுவார்த்தை மூலம் இறுதி முடிவு எடுக்கும் வரை தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பது.

பயன்படுத்த கூடாது

நாகை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலை, இரட்டைமடி வலை, அதிவேக என்ஜின்கள் பொருத்திய படகுகள் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது. இதற்கு மாற்று ஏற்பாடுகள் மீனவர்களின் நலன் கருதி எவ்வாறு மேற்கொள்வது என்றும், எஞ்சியுள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளும் வகையில் மீண்டும் விரைவில் கூட்டம் நடத்தப்படும் என்றும், அதில் மீனவ கிராம பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்