ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரிக்கு சீல் சப்-கலெக்டர் வைத்திநாதன் நடவடிக்கை

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரிக்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2020-07-17 04:03 GMT
பொள்ளாச்சி,

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதை தொடர்ந்து பொள்ளாச்சி என்.ஜி.எம்.கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வாங்குவதற்கு மாணவ-மாணவிகள் ஏராளமானோர் திரண்டனர். கொரோனோ பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் கூட்டத்தை திரட்டியதால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக சப்-கலெக்டர் வைத்திநாதனுக்கு புகார் வந்தது.

சீல் வைப்பு

இந்த புகாரை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய கல்லூரியை பூட்டி சீல் வைக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தாசில்தார் தணிகவேல் தலைமையில் மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்றனர். பின்னர் கல்லூரியின் நுழைவு வாயில் கதவை பூட்டி சீல் வைத்தனர். மேலும் கல்லூரி நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு இருப்பதாக வருவாய் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் கூறுகையில், மாணவர் சேர்க்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தேர்வு முடிவுகள் வெளி வந்ததும் அவர்களே கல்லூரிக்கு வந்து விட்டனர் என்றனர்.

மேலும் செய்திகள்