ஈரானில் தவித்த 24 மீனவர்கள் குமரிக்கு வந்தனர் சளி பரிசோதனைக்கு பின்பு தனிமைப்படுத்தி தங்க வைப்பு

ஈரானில் தவித்த 24 மீனவர்கள் நேற்று குமரி மாவட்டத்திற்கு வந்தனர். கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கல்லூரியில் சளி பரிசோதனைக்கு பின்பு தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர்.

Update: 2020-07-17 05:05 GMT
கன்னியாகுமரி,

ஈரானுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊர் வர முடியாமல் தவித்தனர். அவர்களில் 535 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டனர். அங்கு எஞ்சியிருந்த மீனவர்களை தனி விமானம் மூலம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. அதன் அடிப்படையில் 24 குமரி மீனவர்கள் உள்பட தமிழகத்தை சேர்ந்த 41 பேர் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். அங்கிருந்து நேற்றுமுன்தினம் இரவு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சென்னையில் இருந்து 24 குமரி மீனவர்கள் அரசு பஸ்கள் மூலம் நேற்று காலை 11.30 மணியளவில் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சளி பரிசோதனை

கன்னியாகுமரி அருகே பொட்டல்குளத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரிக்கு அழைத்துவரப்பட்ட அவர்களை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னான், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகிம் ஆகியோர் வரவேற்றனர்.

மீனவர்களிடம் இருந்து சளி மாதிரிகள் பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் அனைவரும் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மீனவர்கள் 24 பேரும் 8 நாட்கள் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் ஜெசீம், அறங்காவலர்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்