மதுரையில் ஒரே நாளில் 267 பேருக்கு கொரோனா; 5 பேர் உயிரிழப்பு 679 பேர் குணமடைந்தனர்

மதுரையில் நேற்று ஒரே நாளில் 267 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 5 பேர் உயிரிழந்தனர். 679 பேர் குணமடைந்தனர்.

Update: 2020-07-17 07:36 GMT
மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் நேற்று 267 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் மதுரை மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

நேற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 198 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 12 பேர் பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், 6 கர்ப்பிணிகளுக்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 145 பேருக்கும் என மொத்தம் 267 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். இதுபோல் 125 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதனை தொடர்ந்து அவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 597 ஆக உயர்ந்துள்ளது. 2,929 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4,534 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்றும் ஒரேநாளில் 679 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதற்கிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 5 பேர் திடீரென உயிரிழந்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த 75 வயது ஆண், 82 வயது பெண், 54 வயது ஆண், 65 வயது ஆண்கள் 2 பேர் என 5 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். நேற்றுடன் மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்