முழு ஊரடங்கு நாளில் திருப்பூரில் வழக்கம் போல் செயல்பட்ட பார்கள் பொதுமக்கள் அதிருப்தி

முழுஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பூரில் நேற்று மது பார்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அனுமதியின்றி நடந்த மதுவிற்பனையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Update: 2020-07-19 22:47 GMT
திருப்பூர்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மாதத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் திருப்பூர் மாநகரம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை அதிகளவில் நடைபெற்றது. பெரும்பாலான மதுபார்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டன. பார்களில் மதுப்பிரியர்கள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை வாங்கி அங்கேயே அமர்ந்து மது அருந்தி சென்றனர்.

மதுபார்கள்

திருப்பூர் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் அனுமதியின்றி மது விற்பனை அமோகமாக நடந்தது. மாநகரில் இயங்கும் பார்களில் வைத்தும், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் இந்த அனுமதியற்ற மது விற்பனை நடைபெற்றது. கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட மதுவகைகளை மதுப்பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

முழு ஊரடங்கு நாளில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிய நிலையில் மதுபார்கள் மட்டும் அனுமதியின்றி மதுவிற்பனையில் ஈடுபட்டது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் அளித்தனர். இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்