சட்டசபையை கொரோனா மருத்துவமனை ஆக்குவோம் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி

சட்டசபையில் ஒரு பகுதியை கொரோனா மருத்துவமனை ஆக்குவோம் என்று அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார். புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

Update: 2020-07-19 22:45 GMT
புதுச்சேரி, 

கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். கவர்னர் கிரண்பெடி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் சென்று அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம், தன்னை ஒரு போலீஸ் அதிகாரியாகவும், மருத்துவர்களை குற்றவாளியாகவும் நினைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார். அளித்த பதிலை ஏற்காமல் பல்வேறு குறுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளை தனது உத்தரவுக்கு அடிபணியும்படி கிரண்பெடி கட்டாயப்படுத்துகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் விடுப்பு எடுக்கலாமா அல்லது போராட்டத்தில் ஈடுபடலாமா? என்ற மன நிலைக்கு வந்துள்ளனர். கீழ் நிலையில் உள்ள பணியாளர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு அதிகாரிகளை படாத பாடுபடுத்துவது சரியானது இல்லை.

புதுச்சேரி மாநிலம் பல்வேறு வகையில் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கவர்னருக்கு உள்ளது. ஆட்சியை கலைக்க நினைத்து பல்வேறு முயற்சிகளை செய்தார். பட்ஜெட்டை தக்கல் செய்யவிடாமல் தடுத்துப் பார்த்தார். தற்போது, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கூட காலத்தோடு செய்ய முடியாத நிலை உள்ளது.

கவர்னர் மாளிகையில் 100 நாட்கள் தூங்கி விட்டு திடீரென வந்து ஆய்வு நடத்துகிறார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அதிகாரிகள் வேலை செய்கின்றனர். ஆனால் அவர்களது பணியை அங்கீகரிப்பதற்கு பதிலாக மோசமாக பேசக்கூடாது. கொரோனா தடுப்பு பணியில் கவர்னர் ஈடுபடத் தொடங்கிய பின்னர் தான் புதுவையில் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள். நீங்கள் (கவர்னர்) அல்ல.

உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் பெரிய கவர்னர் மாளிகையில் இருப்பதற்கு பதிலாக சிறிய இடத்தில் கவர்னர் இருக்கலாம். தற்காலிகமாக கவர்னர் மாளிகையின் அடித்தளத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றலாம். உங்களது மிரட்டல்களுக்கு நான் அஞ்சமாட்டேன். புதுச்சேரியின் நலன் தான் முக்கியம். தேவைப்பட்டால் சட்டசபை வளாகத்தில் ஒரு பகுதியை கூட கொரோனா மருத்துவமனையாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்