ஆடி அமாவாசை களையிழந்தது நீர் நிலைகள் வெறிச்சோடின வீடுகளிலேயே தர்ப்பணம் கொடுத்த மக்கள்

கொரோனா ஊரடங்கு தடையால் ஆடி அமாவாசை நேற்று களையிழந்தது. இதனால் நீர்நிலைகள் வெறிச்சோடின.

Update: 2020-07-20 22:15 GMT
நெல்லை,

அமாவாசை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இதிலும் ஆடி, தை மாதங்களில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த அமாவாசைகளில் தங்களுடைய முன்னோர்களுக்கு ஆறு, கடல், குளங்களின் கரைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

நெல்லை, தென்காசி மாவட்ட மக்கள் ஆடி அமாவாசையன்று தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு குலதெய்வம் கோவில்களில் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் பாபநாசசுவாமி கோவில் படித்துறை, அகஸ்தியர் அருவிகரை, அம்பை சின்னசங்கரன்கோவில் படித்துறை, சேரன்மாதேவி படித்துறை, வீரவநல்லூர், அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், கோடகநல்லூர், நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, இசக்கியம்மன் கோவில் படித்துறை, அருகன்குளம் கோசாலை ஜடாயூத்துறை படித்துறை, சீவலப்பேரி ஆகிய இடங்களிலும், உவரி கடற்கரை, குற்றாலத்திலும் குளித்துவிட்டு தங்களுடைய முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கூட்டமாக சென்று ஆறு, குளம், கடற்கரைகளில் தர்ப்பணம் செய்யக்கூடாது என்று அரசு உத்தரவிட்டதையொட்டி நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்யக்கூடிய இடங்களில் நேற்று அதிகாலை 3 மணி முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, இசக்கியம்மன் கோவில் படித்துறை, அருகன்குளம் கோசாலை ஜடாயூத்துறை படித்துறை ஆகிய இடங்களுக்கு மக்கள் செல்லமுடியாத அளவிற்கு போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து வேலி அமைத்தனர். மேலும் அங்கு சென்ற புரோகிதர்களையும் போலீசார் விரட்டினர். இதனால் அந்த பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அமாவாசை தொடங்கியதால் சிலர் நள்ளிரவில் தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்து உள்ளனர். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களை விரட்டிவிட்டனர். புரோகிதர்கள் வைத்து தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் மக்கள் தாங்களாகவே ஆற்றில் குளித்துவிட்டு தண்ணீரில் எள்ளை போட்டு தர்ப்பணம் செய்து விட்டு சென்றனர்.

அருகன்குளம் கோசாலை ஜடாயூத்துறை படித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் ஏராளமானவர்கள் வந்து குளித்துவிட்டு தாங்களாகவே ஆற்றில் எள்ளை போட்டு தங்களுடைய முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள விநாயகர் கோவிலிலும், ஜடாயூ தீர்த்தம் லட்சுமிநாராயணர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். ஏராளமானவர்கள் அதிகாலையில் தங்களுடைய வீட்டு வாசலில் நின்று சூரியனை வழிபட்டுவிட்டு தாங்களாகவே எள்ளும், தண்ணீரும் இரைத்து தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானோர் காலையில் இருந்தே அருவிகளில் குளித்து விட்டு அருவி கரைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சுற்றுலா தலங்கள் அனைத்திற்கும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றாலம் அருவிக்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இருப்பினும் சிலர் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் வந்து தர்ப்பணம் மட்டும் கொடுத்துவிட்டு செல்கிறோம் என்று போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதிக்கவில்லை. அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் நேற்று காலையில் தென்காசி யானை பாலம் பகுதியிலுள்ள சிற்றாற்று கரையில் பலர் தர்ப்பணம் கொடுத்தனர். அங்கு கூட்டம் அதிகமாகவே தகவலறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களை கலைந்து செல்லக்கூறி கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினர். அதன் பிறகு வந்தவர்கள் அங்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்