7-வது ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்தக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் பேராசிரியர்கள் போராட்டம்

7-வது ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்தக்கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-21 06:44 GMT
அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இன்னும் 7-வது ஊதியக்குழு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆசிரியர்கள் பலமுறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் 7-வது ஊதியக்குழு நிர்ணயித்த ஊதியத்தை அமல்படுத்தக்கோரி என்ஜினீயரிங் பேராசிரியர்கள் நேற்று பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் உள்ள துணைவேந்தர் அறையின் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

பின்னர் சில பேராசிரியர்களை அழைத்து துணைவேந்தர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினைகுறித்து நிதித்துறையினருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து பேராசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தூய்மை பெண் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நிர்வாக அலுவலகம் அருகே திரண்டனர். தூய்மை பெண் பணியாளர்கள் தாங்கள் வழக்கமாக பணிசெய்யும் இடத்தை விட்டு விட்டு வேறு இடங்களில் பணியாற்ற சொல்வதாகவும், கூடுதல் பணி அளிக்கப்படுவதாகவும் கூறி அவர்கள் துணைவேந்தரை சந்தித்து முறையிட வந்தனர்.

துணைவேந்தர் முருகேசன் அவர்களில் சிலரை அழைத்து பேசினார். அப்போது அவரவர் பணி செய்யும் இடத்திலேயே பணியாற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தூய்மை பெண் பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்