கோட்டூர் அருகே, மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கோட்டூர் அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-21 22:30 GMT
கோட்டூர், 

கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தானில் உள்ள அரசு மதுக்கடை அருகில் மளிகை கடை நடத்தி வந்தவர் குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பெருகவாழ்ந்தான் பகுதியில் நோய் தொற்று பரவாமல் இருக்க 3 நாள் தொடர் கடையடைப்பு செய்துள்ளனர். ஆனால் மதுக்கடை மட்டும் திறந்திருந்தது. இதனால் இந்த கடை முன்பு சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூடியது.

இதனால் அச்சப்பட்ட மண்ணுக்குமுன்டான், பெருகவாழ்ந்தான் பொதுமக்கள் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டு கடையை திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சுமித்திரா மறையரசு தலைமை தாங்கினார். இதில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், இணைச்செயலாளர் குமாரசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மதுக்கடை, முத்துமாரியம்மன் கோவில், பொதுமக்கள் குளிக்கும் குளம், உயர்மின் அழுத்த மின்மாற்றி, 10 கிராமங்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் பாதை ஆகியவற்றிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. எனவே இந்த மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வேலு, ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்