ராணிப்பேட்டையில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் அகற்றம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ராணிப்பேட்டையில் சாலையோர தள்ளுவண்டி கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2020-07-22 02:59 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை), 

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் நடைபெற்று வந்த வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய பஸ் நிலையத்திற்கு முன்புறம் உள்ள வண்டிமேட்டு தெரு, ரெயில்வே ஸ்டேசன் ரோடு ஆகிய இடங்களில் சாலையோரம் வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், கருவாடு, துணிகளை வியாபாரம் செய்தனர். மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களது மாட்டு வண்டிகளை தள்ளுவண்டிகளாக மாற்றி வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி செல்பவர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளதால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.

இதனையடுத்து நேற்று நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி உத்தரவின்பேரில், நகராட்சி துப்புரவு அலுவலர் அப்துல்ரகீம், ஆய்வாளர்கள் தேவபாலா, முருகன், நகரமைப்பு ஆய்வாளர்கள் சீனிவாசன், சுரேஷ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அப்பகுதியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, மாட்டு வண்டி கடைகளை அகற்றினர்.

இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் செய்திகள்