கர்நாடகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்று: கவர்னருடன் எடியூரப்பா திடீர் சந்திப்பு - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்

கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கவர்னர் வஜூபாய் வாலாவை, முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

Update: 2020-07-22 23:15 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது.

கர்நாடகத்தில் இதுவரை 71 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கிவிட்டது. குறிப்பாக மக்கள் அதிகளவில் வசித்து வரும் மாநில தலைநகரான பெங்களூருவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க ஒரு வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. இதனால் பெங்களூரு உள்பட மாநிலத்தில் எங்கும் இனி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும், கொரோனா பரவலை தடுக்க சோதனைகளை அதிகரிப்பது, மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முன்னுரிமை அளிப்பது என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில், பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேற்று காலையில் முதல்-மந்திரி எடியூரப்பா திடீரென்று சென்றார். பின்னர் அவர், கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து பேசினார். கடந்த 4 மாதங்களுக்கு பின்பு கவர்னரை எடியூரப்பா சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது கவர்னரிடம், கர்நாடகத்தில் தற்போதுள்ள கொரோனா சூழ்நிலை குறித்து எடியூரப்பா விளக்கமாக எடுத்து கூறினார். அதே நேரத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள், ஆஸ்பத்திரிகளில் செய்துள்ள படுக்கை வசதிகள், கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவர்னர் வஜூபாய் வாலாவிடம் எடியூரப்பாவிடம் விளக்கமாக எடுத்து கூறினார்.

அதே நேரத்தில் கர்நாடகத்தில் சமீபத்தில் நிலச்சீர்த்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்தது ஏன்?, அதனால் ஏற்படும் சாதகம், பாதகங்கள் குறித்தும் வஜூபாய் வாலாவிடம் எடியூரப்பா விளக்கினார். இதுபோன்று ஏ.பி.எம்.சி. சட்டத்தில் திருத்தம் செய்தது, அதற்கான காரணம் தொடர்பாகவும் கவர்னருடன் எடியூரப்பா பேசினார். இந்த சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது, விவசாயிகளுக்கு நன்மை தான் கிடைக்கும் என்று எடியூரப்பா கூறியதாக தெரிகிறது.

அதே நேரத்தில் அரசின் நிதி நிலை மற்றும் அரசியல் குறித்தும் 2 பேரும் பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் மேல்-சபை நியமன உறுப்பினர்களை நியமிப்பது குறித்தும் கவர்னருடன் எடியூரப்பா பேசினார். நேற்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்-மந்திரி எடியூரப்பா, வஜூபாய் வாலாவுடன் 15 நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்