புதிதாக 123 பேருக்கு தொற்று: புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி சாவு எண்ணிக்கை 34 ஆனது

புதுச்சேரியில் நேற்று புதிதாக 123 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.;

Update:2020-07-24 05:46 IST
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் நேற்று 558 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 119 பேர், காரைக்கால் 3 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 75 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 44 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 3 பேர் காரைக்காலிலும், ஒருவர் ஏனாமிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் நேற்று சிகிச்சை குணமடைந்து 31 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 2,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,400 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர். 987 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் 33,096 பேர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 280 பரிசோதனைகள் முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.

இந்தநிலையில் நேற்று தொற்றுக்கு கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 2 பேரும், அரசு பொது மருத்துவமனையில் ஒருவரும் என 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் கதிர் காமம் மருத்துவமனையில் கடந்த 19-ந் தேதி வாணரப்பேட்டையை சேர்ந்த 46 வயது ஆண் நபர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதேபோல் கடந்த 20-ந் தேதி வில்லியனூர் கூடப்பாக்கத்தை சேர்ந்த 59 வயது ஆண் நபர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

புதுவை அரசு பொது மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20-ந் தேதி லாஸ்பேட்டையை சேர்ந்த 50 வயது நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்