விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலி - டி.எஸ்.பி., டாக்டர்கள் உள்பட 112 பேருக்கு தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் டி.எஸ்.பி., டாக்டர்கள் உள்பட 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2020-07-23 22:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 2,501 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 29 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

மரக்காணம் குளக்கரை பகுதியை சேர்ந்த 77 வயதுடைய முதியவர், கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உமிழ்நீர், பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இதன் முடிவில் அவர், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உரிய சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் இறந்தார்.

இதேபோல் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டையை சேர்ந்த 48 வயதுடைய பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த 36 வயதுடைய கூலித்தொழிலாளி ஒருவர், மதுபோதையில் மாடி படிக்கட்டில் இருந்து தவறி, கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு உரிய சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்டவர்களின் கொரோனா பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 3 பெண் டாக்டர்கள், 6 செவிலியர்கள், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ரவீந்திரன், அலுவலக எழுத்தர், பெண் போலீஸ், காவலர் குடியிருப்பில் 3 வயது குழந்தை, ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர், விக்கிரவாண்டி வருவாய் ஆய்வாளர், விக்கிரவாண்டி போலீஸ்காரர், விழுப்புரம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி உதவியாளர், விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர் உள்பட 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 613 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்