மராட்டியத்தில் புதிய தளர்வுகளுடன் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு வணிக வளாகங்களை திறக்க அனுமதி

மராட்டியத்தில் புதிய தளர்வுகளுடன் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களை திறக்கவும், ஆட்டோ, டாக்சிகளில் கூடுதலாக ஒருவர் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-30 22:23 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

கடைசியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது.

தற்போது மாநிலத்தில் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 500-ஐ நெருங்கி உள்ளது.

இந்தநிலையில் மாநில அரசு மீண்டும் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில தலைமை செயலாளர் சஞ்சய் குமார் வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் அவசரகால நடவடிக்கையாக இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் திறக்க அனுமதி

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதும் மாநில அரசு புதிய தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதில், ‘மிஷன் பிகெயின் அகென்' திட்டத்தின் கீழ் மாநில அரசு வணிக வளாகங்கள், மார்க்கெட் வளாகங்களை வருகிற 5-ந் தேதி முதல் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் வணிக வளாகங்களில் தியேட்டர்கள், உணவு வளாகங்கள்(புட் கோர்ட்ஸ்), உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் உணவகங்கள் பார்சல், டெலிவிரி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல உடற்பயிற்சி, ஷாப்பிங் போன்ற அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு பொதுமக்கள் வீட்டு அருகில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டோ, டாக்சி பயணிகள்

அத்தியாவசிய தேவைகளுக்காக ஆட்டோ, டாக்சி அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆட்டோவில் டிரைவருடன் ஒரு பயணி மட்டுமே பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாடு தளத்தப்பட்டு இனி 2 பயணிகள் ஆட்டோவில் செல்லலாம். இதேபோல டாக்சிகளில் இதுவரை 2 பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது. இனி 3 பயணிகள் செல்லலாம்.

இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இனி 2 பேர் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இருவரும் முக கவசம், ஹெல்மட் அணிந்திருக்க வேண்டும்.

இறுதி சடங்குகளில்...

பொதுமக்கள் வேலை செய்யும் இடம், மருத்துவ காரணங்களுக்காக மட்டும் கட்டுப்பாடுகள் இன்றி பயணம் செய்ய முடியும். பொதுமக்கள் அதிகளவில் கூடுவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ளலாம். இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கு பெறக்கூடாது.

இதேபோல மாநிலத்தில் கோல்ப் மைதானங்கள், துப்பாக்கி சுடும் தளங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், டென்னிஸ், திறந்தவெளி பூப்பந்து மைதானங்கள், மல்லா்கம்பம் விளையாட்டு ஆகியவற்றுக்கு வருகிற 5-ந் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மராட்டியத்தில் ‘மிஷன் பிகெயின் அகென்' திட்டத்தின் கீழ் சலூன், அழகு நிலையங்கள், 10 சதவீத ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்