தூத்துக்குடியில் அரசு டாக்டர் உள்பட மேலும் 4 பேர் உயிரிழப்பு நெல்லையில் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 220 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் அரசு டாக்டர் உள்பட 4 பேர் பலியானார்கள். நெல்லையில் தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது.

Update: 2020-07-31 00:14 GMT
நெல்லை,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ளனர். பண்டாரவிளையில் பணியாற்றி வந்த அரசு டாக்டர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று தூத்துக்குடியை சேர்ந்த 82 வயது முதியவர், தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண், ஆண்டாள் தெருவை சேர்ந்த 77 வயது முதியவர் ஆகியோரும் கொரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்து உள்ளது.

6,812 பேர் பாதிப்பு

மேலும் மாவட்டத்தில் புதிதாக 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சாத்தான்குளம், கோவில்பட்டி பகுதிகளை சேர்ந்தவர்களும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 812 ஆக அதிகரித்து உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 494 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 275 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் 5 பேர். நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 105 பேர். பாளையங்கோட்டை மண்டல பகுதியில் மட்டும் 39 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் சேரன்மாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பரப்பாடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,002 ஆக உயர்ந்துள்ளது.

192 பேர் வீடு திரும்பினர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 192 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர். இதில் 77 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள். மற்ற அனைவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவார்கள்.

மேலும், கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆலங்குளம், கடையம், செங்கோட்டையை சேர்ந்த தலா ஒருவர், கடையநல்லூரை சேர்ந்த 9 பேர், கீழப்பாவூரை சேர்ந்த 3 பேர், மேலநீலிதநல்லூரை சேர்ந்த 2 பேர், சங்கன்கோவிலை சேர்ந்த 23 பேர், தென்காசியை சேர்ந்த 5 பேர், வாசுதேவநல்லூரை சேர்ந்த 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,968 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்