வேதாரண்யம் அருகே மூதாட்டியிடம் நகை-பணம் கொள்ளை: தந்தை-மகன்கள் உள்பட 7 பேர் கைது

வேதாரண்யம் அருகே நாயை கொன்று மூதாட்டியிடம் நகை- பணம் கொள்ளையடித்த வழக்கில் தந்தை- மகன்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-08-19 22:00 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட செண்பகராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி(வயது 80). இவர் கூரை வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு கல்யாணி வளர்த்து வந்த நாயை விஷம் வைத்து கொன்ற மர்ம மனிதர்கள், கல்யாணி வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கல்யாணியை தாக்கி நகை, ரூ.7 ஆயிரம் மற்றும் டி.வி. ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து கரியாப்பட்டினம் போலீசில் கல்யாணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் குறித்து போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார், தென்னம்புலத்தை சேர்ந்த மகேந்திரன்(வயது 44), அவரது மகன்கள் அரவிந்தன்(20) மற்றும் 17 வயது சிறுவன், கத்தரிப்புலத்தை சேர்ந்த ஆகாஷ்(19), கரியாப்பட்டினத்தை சேர்ந்த விஜயகுமார்(22), குரவப்புலத்தை சேர்ந்த நமச்சிவாயம்(20), தென்னம்புலத்தை சேர்ந்த சிவகுமார்(20) ஆகிய 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கல்யாணியிடம் இருந்து நகை, பணம், டி.வி. ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் செண்பகராயநல்லூரை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் புகுந்து அவரை மிரட்டி ரூ.3500-ஐ கொள்ளையடித்ததும், வாய்மேடு மின் வாரியத்தில் பணிபுரியும் கனகா என்ற பெண்ணை மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் தந்தை-மகன்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 8 பவுன் நகைகள், பணம், ஆயுதங்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த இன்ஸ்பெக்டர்கள் முனியாண்டி, சந்தானமேரி, சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்