திருமங்கலத்தில், மின்சாரம் தாக்கி விவசாயி பலி - உறவினர்கள் சாலை மறியல்

திருமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியானதை தொடர்ந்து உறவினர்கள் 2 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-22 22:15 GMT
திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அக்னிவீரன் (வயது 44). விவசாயி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அக்னிவீரன் நேற்று காலை அம்மாபட்டி பகுதியில் உழவுப்பணி செய்வதற்காக வயல்வெளியை சுத்தம் செய்தார். அப்போது கீழே கிடந்த இரும்பு குழாய் ஒன்றை ஊன்றி நிறுத்தினார். இதில் மேலே சென்ற மின் கம்பி மீது இரும்புக் குழாய் பட்டதில் மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சிந்துபட்டி போலீசில் அக்னிவீரனின் உறவினர்கள் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் புகார் எடுத்துக் கொள்ள காலதாமதமானது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மதுரை-விருதுநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் புகார் வாங்க மறுப்பதாகவும், உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் புகார் கூறினர். சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் நீடித்தது. போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி, தாசில்தார் தனலட்சுமி, இன்ஸ்பெக்டர் மகேந்திரன், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் முடிவுக்கு வராததால் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் செய்திகள்