திருச்சியில் 9 மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் 9 மாவட்ட அரசு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-09-23 09:15 GMT
திருச்சி, 

கொரோனா தடை உத்தரவு காலத்தில் ஏற்பட்ட சரக்கு இருப்பு குறைவிற்கு ஏற்கனவே 2 சதவீதம் அபராதம் வசூலித்த பிறகும் மீண்டும் 50 சதவீதம் அபராதம் செலுத்த சொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் ஆய்வு செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 5 மண்டலங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்படி, திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் அடங்கிய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று திருச்சி டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

திருச்சி மாவட்ட தலைவர் பிச்சைமுத்து வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் முருகானந்தம், கோவிந்தராஜன், கல்யாணசுந்தரம் மற்றும் கடலூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.கே.சிவகுமார் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் பணியாளர்களை மதுக்கூட ஒப்பந்ததாரர்கள் மிரட்டி அத்துமீறும் செயல்கள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்