மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராமன் தகவல்

சேலம் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-23 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சிகளுக்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் அளிக்கலாம். அதன்படி அமைப்பாளர் வேலைக்கு 451 இடங்களும், சமையலர்கள் வேலைக்கு 138 இடங்களும், சமையல் உதவியாளர் வேலைக்கு 981 இடங்களும் காலியாக உள்ளன.

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் (பெண்கள் மட்டும்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். 30-ந் தேதிக்கு பிறகு காலதாமதமாக தபால் மூலம் மற்றும் நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. மேலும் ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சி அலுவலகங்களிலும் பெற்று கொள்ளலாம். சேலம் மாவட்ட இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன்படி பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் வேலைக்கு கல்வித்தகுதியாக பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 வயதிற்குள் 40 வயதுக்கு மிகாதவராகவும் பழங்குடியினருக்கு 18 வயதிற்குள் 40 வயதுக்கு மிகாதாவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 43 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் சான்றிதழின் நகல் மட்டும் இணைக்க வேண்டும். நேர்முக தேர்வின் போது அசல் சான்றுகள் காண்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், கல்வித்தகுதிச் சான்று நகல், மதிப்பெண் சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பின் உரிய அலுவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அதற்கான சான்றிதலின் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்