புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தேர்வை புறக்கணித்து திடீர் தர்ணா

புதுச்சேரியில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பல்கலைக்கழக அறிவிப்பின்படி புத்தகத்தை பார்த்தும், ஆன்லைன் மூலமாகவும் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி தேர்வை புறக்கணித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2020-09-24 05:24 IST
புதுச்சேரி,

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவது கட்டாயம் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்ததுடன் இம்மாத (செப்டம்பர்) இறுதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகம், புதுச்சேரியில் கல்லூரி இறுதி பருவ தேர்வுகள் தொடங்கி தற்போது நடந்து வருகின்றன. புதுவை பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளதன் அடிப்படையில் மாணவர்கள் புத்தகங்களையும், குறிப்புகளையும் வைத்து தேர்வு எழுதி வருகிறார்கள்.

இந்தநிலையில் புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஆசிரியர் பட்டய படிப்பு நிறுவனங்களில் படிக்கும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு தொடங்கியது. புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் நிறுவனம், வள்ளலார் அரசு பள்ளி, வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்நுட்ப மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது.

இதில் கற்றல் முறைகள், கற்பித்தல் எளிதாக்குதல் ஆகிய 2 தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த தேர்வுகளை பல்கலைக் கழகம் அறிவித்தபடி புத்தகங்களை பார்த்து எழுத தேர்வு கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை.

நேற்று தமிழ்ப்பாட தேர்வு நடந்தது. இந்தநிலையில் லாஸ்பேட்டை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்நுட்ப மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனத்தில் பயிலும், டி.டி.எட் மாணவர்கள், தேர்வை புறக்கணித்து தேர்வு மையத்தின் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

அப்போது, கொரோனாவால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வகுப்புகள் நடத்தப் படவில்லை. எனவே கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதித்துள்ளதை போல் தங்களையும் பாட புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், ஆன்லைன் மூலமாகவும் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் சமாதானத்தை ஏற்காமல் மாணவர்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றனர்.

ஆனால் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வள்ளலார் அரசு பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாணவர்கள் நேற்று தமிழ்பாடத்தேர்வை புறக்கணிக்காமல் எழுதினர்.

மேலும் செய்திகள்