பழுதடைந்த மின்மாற்றியை மாற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

விக்கிரமங்கலம் அருகே பழுதடைந்த மின்மாற்றியை மாற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-09-24 23:09 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்த முத்துவாஞ்சேரி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்மாற்றி நேற்று முன்தினம் பழுதானது. இந்த மின்மாற்றியின் மூலம் மின்சாரம் பெற்று இயக்கப்படும் மின் மோட்டார்களை கொண்டு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதன்படி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தற்போது சம்பா நடவு பணிகள் நடைபெற உள்ளன. இதில் ஒரு சில விவசாயிகள் நடவு பணிகளை ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் மின்சாரமின்றி மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலையில் வயல்களுக்கு எப்படி தண்ணீர் பாய்ச்சுவது என்று விவசாயிகள் கவலை அடைந்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு, பழுதான மின்மாற்றியை உடனடியாக மாற்றிட வேண்டும், அதிகத்திறன் கொண்ட மின்மாற்றி வைக்க வேண்டும் என்று கோரி முத்துவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே ஸ்ரீபுரந்தான்- அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரியிடம் எடுத்துக்கூறி மின்மாற்றியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஸ்ரீபுரந்தான் -அரியலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்