ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம் ஆசிரியை வீட்டில் நகை - பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஈரோட்டில் பட்டப்பகலில் ஆசிரியை வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-09-30 00:39 GMT
ஈரோடு,

ஈரோடு சாஸ்திரி நகரில் உள்ள குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 50). எல்.ஐ.சி. ஏஜெண்ட். இவருடைய மனைவி கல்யாணி (47). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கல்யாணி நேற்று காலை வெளியே சென்று இருந்தார்.

சுரேஷ் தனது மகனை படிப்பு விஷயமாக வெளியே அனுப்பி விட்டு, வீட்டை காலை 10.30 மணிக்கு பூட்டி விட்டு அவரும் வேலைக்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து சுரேஷ் சாப்பாட்டுக்காக மதியம் 2.30 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

நகை-பணம் கொள்ளை

அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 2 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சுரேஷ் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக அங்கு வந்து சென்றது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் பட்ட பகலில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணம் மற்றும் நகையை திருடிச்சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்