அந்தியூர் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி தற்கொலை

அந்தியூர் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-09-30 06:38 GMT
அந்தியூர்,

அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். அவருடைய மனைவி சுமதி. இவர்களுடைய மகன் இளங்கோ (வயது 23). நாமக்கல் மாவட்டம் தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன். இவரது 2-வது மகள் ரம்யா (21). இளங்கோவும், ரம்யாவும் குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் படித்து கொண்டிருந்தனர். ஒரே கல்லூரியில் படித்ததால் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலாக மாறியது. இளங்கோ, ரம்யாவின் காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரிய வந்தது. ஆனால் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இருவரது வீட்டிலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து 2 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் கோவிலில் இளங்கோவும், ரம்யாவும் மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 2பேரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் காதல் திருமணத்தை இளங்கோவின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். ரம்யாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் இளங்கோ ரம்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார். இளங்கோ ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் இளங்கோ நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார். சக்திவேலும், சுமதியும் அந்தியூர் சென்றுவிட்டனர். வீட்டில் ரம்யா மட்டும் தனியாக இருந்தார். சக்திவேலும், சுமதியும் இரவில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது இளங்கோ ஒரு சேலையிலும், ரம்யா மற்றொரு சேலையிலும் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்கோ, ரம்யா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்., ‘சம்பவத்தன்று ரம்யா தனது தந்தையுடன் மதியம் 12.30 மணி அளவில் செல்போனில் பேசி நலம் விசாரித்துள்ளார். இந்த நிலையில் மாலையில் அவர் இளங்கோவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கிடையே வேலைக்கு சென்று திரும்பிய இளங்கோ, மனைவி ரம்யா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து மனம் உடைந்துள்ளார். துக்கம் தாங்காமல் அவரும் மற்றொரு சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேற்கண்டவை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரம்யாவுக்கு திருமணம் நடந்து 3 மாதங்களே ஆவதால் இதுபற்றி கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. ஜெயராமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலை செய்து கொண்டது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்