ஜெயங்கொண்டம் அருகே, விளாங்குளம் ஏரியில் முதலை; வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் அருகே விளாங்குளம் ஏரியில் முதலை கிடப்பதாக வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-10-07 22:00 GMT
ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே உள்ளது விளாங்குளம் ஏரி. இங்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு முதலை இருப்பதை சிலர் பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த ஏரியை கால்நடைகளுக்கு குடிநீர் அருந்துவதற்காக பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டனர். பொதுமக்களும் அந்த ஏரிக்கு செல்வதை நிறுத்திவிட்டனர்.

மேலும் அந்த ஏரியில் முதலை இருப்பதாகவும், கவனமாக இருக்கவும், குழந்தைகள், கால்நடைகளை ஏரியில் இறக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக உட்கோட்டை ஊராட்சி யுத்தபள்ளம் அருகே உள்ள திறந்த வாசல் ஏரியில் முதலையை சிலர் பார்த்து பயந்து ஓடி வந்துள்ளனர்.

பகலில் முதலை தண்ணீருக்குள் இருப்பதையும், இரவில் வெளியில் கிடப்பதையும் கிராமமக்கள் பார்த்துள்ளனர். இந்த முதலை ஊருக்குள் புகுந்தால் கால்நடைகளையும், சிறுவர்களையும் கடித்து விடும் இதனால் உயிர் சேதம் ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். மாலைநேரத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கால்நடைகளை குளிப்பாட்டுவதையும், கை, கால்களை அலம்புவதையும் தவிர்த்து வருகின்றனர்.

தப்போது, முதலை தரையில் இருந்து ஏரிக்குள் இறங்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக வனத்துறையினர் விளாங்குளம், ஏரி, திறந்தவாசல் ஏரிகளில் உள்ள முதலையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்