வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் முடிந்த எல்லா வழிகளிலும் உதவிகள் செய்யப்படும் உத்தவ் தாக்கரே பேச்சு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் முடிந்த எல்லா வழிகளிலும் உதவிகள் செய்யப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Update: 2020-10-19 21:25 GMT
மும்பை,

மராட்டியத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் புனே, அவுரங்காபாத், கொங்கன் மண்டலங்களில் விளை பயிர்கள் அதிகளவில் சேதமடைந்து உள்ளன. மேலும் மழைக்கு 48 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் விவசாய பயிர்கள் நாசமடைந்து உள்ளன. இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று சோலாப்பூரில் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது, அவர் விவசாயிகள் மத்தியில் பேசியதாவது:-

வரும் நாட்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. எனவே மழை முழுமையாக நின்ற பிறகு, எங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் உதவி செய்வோம். இப்போது நான் எந்த அறிவிப்புகளையும் வெளியிடப்போவதில்லை.

தலா ரூ.4 லட்சம்

மத்திய அரசிடம் உதவி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?. மத்திய அரசு வெளிநாட்டு அரசாங்கம் இல்லை. நாட்டையும், மாநிலங்களையும் பார்த்து கொள்வது மத்திய அரசின் கடமை. பிரதமர் மோடி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 10 பெண்களுக்கு தலா ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

கடன் வாங்கி உதவி

இதேபோல மரத்வாடா மண்டலத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்வார், மாநில அரசு கடன் வாங்கி தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவா் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய கடன் வாங்குவதை தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை. மாநில அரசு வரலாறு காணாத வகையில் பொருளாதார பிரச்சினையை சந்தித்து உள்ளது. இது குறித்து முதல்-மந்திரியை சந்தித்து பேச உள்ளேன்” என்றார்.

மேலும் செய்திகள்