ஜனதாதளம்(எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா முயற்சி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா முயற்சி செய்வதாக குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Update: 2020-10-19 22:39 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா, ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, கே.ஆர்.பேட்டையை கைப்பற்றி ஆகிவிட்டது, இப்போது சிரா தொகுதியை பிடிப்போம் என்று கூறியுள்ளார். அவர் மக்களுக்கு போதையை கொடுத்து வீதியில் படுக்க வைத்துள்ளார். இது ஊடகங்களிலேயே வந்துள்ளது. பா.ஜனதா வேட்பாளர் மனு தாக்கலின்போது, இளைஞர்களுக்கு மதுபானத்தை கொடுத்து போதையில் தள்ளினர். பாவத்தின் பணத்தை எடுத்து சென்று பா.ஜனதாவினர் சிராவில் முகாமிட்டுள்ளனர்.

ஒத்துழைப்பு வழங்கவில்லை

அந்த பணத்தை வறுமையில் வாடும் மக்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த நான் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சித்தராமையா கூறியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக அவர் என்னவெல்லாமோ பேசுகிறார். எனக்கு எதிராக பேச அவரிடம் எந்த விஷயமும் இல்லை. அதனால் அவர் இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விஷயத்தை எடுத்துள்ளார்.

கூட்டணி ஆட்சியில் கூட்டணி ஒருங்கிணைப்பு தலைவராக சித்தராமையா இருந்தார். அப்போது ஒரு நாளும் அவர் இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து என்னிடம் விவாதிக்கவில்லை. அவர் இப்போது பொய் சொல்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது சித்தராமையாவுக்கு இப்போது தான் அக்கறை உள்ளது. அடிக்கடி என்னை கிளற வேண்டாம். என்னை பற்றி பேசும்போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.

மனநிலைக்கு வருவார்கள்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைக்கு நான் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும் அல்லவா?. அதை சித்தராமையா ஏன் செய்யவில்லை. கர்நாடக மக்கள் சாதி-மதங்களை மறந்து மீண்டும் குமாரசாமி வேண்டும் என்ற மனநிலைக்கு வருவார்கள். சித்தராமையாவுக்கு பா.ஜனதா தெரியவில்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சி மட்டும் தெரிகிறது. சித்தராமையா, ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழிக்க முயற்சி செய்கிறார். அவர் என்னை பற்றி பேசுவதை கைவிட வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்