குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 3-ம் நாளான நேற்று பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2020-10-20 00:10 GMT
குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாளன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

2-ம் நாளான நேற்று முன்தினம் முதல் 9-ம் நாள் வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் முத்தாரம்மன் விஸ்வகர்மா கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பார்வதி கோலம்

விழாவின் 3-ம் நாளான நேற்றும் காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். முககவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவில் முத்தாரம்மன் பார்வதி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

மேலும், குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் இருந்து கோவிலுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. புறவழிச்சாலையில் பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரசு, தனியார் பஸ்கள் குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை-உடன்குடி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும். சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் பக்தர்கள் மீண்டும், அங்கிருந்து பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த பகுதியில் தற்காலிக நிழற்குடை இல்லாததால் வெயிலில் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்