கொரோனாவால் விழா எளிமையாக நடக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைவரின் விஜயதசமி உரை ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு

கொரோனா பரவல் காரணமாக ஆர்.எஸ்.எஸ். தலைவரின் விஜயதசமி உரையை ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-20 21:07 GMT
மும்பை,

விஜயதசமி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் தொண்டர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் உரையாற்றுவது வழக்கம். அந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள மராட்டிய மாநிலம் நாக்பூரின் ரஷிம்பாக் மைதானத்தில் நடைபெறும் விழாவில் நாடு முழுவதும் இருந்தும் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். அங்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பும் நடைபெறும்.

இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் உரையாற்றுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆர்.எஸ்.எஸ். எளிய முறையில் விஜயதசமி விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஆன்லைன் மூலம் ஒளிபரப்பு

அதன்படி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விஜயதசமி உரை வருகிற 25-ந் தேதி நாக்பூரில் உள்ள சங்க தலைமையகத்தில் நடைபெற உள்ளது. இதில் 50 தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். தலைவரின் உரை ஆன்லைனின் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எச்.சி.எல். நிறுவனர் சிவ்நாடார் கலந்து கொண்டார். ஆனால் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படவில்லை. இந்த தகவலை நாக்பூர் நகர அமைப்பாளர் ஆர்.எஸ்.எஸ். ராஜேஷ் லோயா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்