வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் ரூ.1 லட்சம் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update:2020-10-21 03:30 IST
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராசு, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார், வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய விரலி மஞ்சள் 25 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சள் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் முனீஸ்வரன்(வயது 38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகளை அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று முனீஸ்வரன் வீட்டிற்கு கிழக்கே இலங்கைக்கு கடத்துவற்காக புதர்களில் பதுக்கி வைத்திருந்த மேலும் 19 மஞ்சள் மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 19 மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்