பாசனத்திற்காக திறக்கப்பட்ட அமராவதி தண்ணீர் கரூர் வந்தடைந்தது - சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் வேண்டுகோள்

பாசனத்திற்காக திறக்கப்பட்ட அமராவதி தண்ணீர் கரூர் வந்தடைந்தது சிக்கனமாக பயன்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2020-10-20 22:15 GMT
க.பரமத்தி,

காற்றழுத்த மேலடுக்கு சுழற்சியினால் பருவமழை தீவிரம் அடைந்து, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்மட்டம் 72.95 அடியாக உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி (4 டி.எம்.சி) ஆகும்.

அமராவதி ஆறு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், தாராபுரம், புதுப்பை, கரூர் மாவட்டம் வடகரை, ஒத்தமாந்துறை, ராஜபுரம், அணைப்பாளையம், கரூர் வழியாக திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மற்றும் ஆற்றிலிருந்து 18 வாய்க்கால் மூலம் பிரிக்கப்பட்டு திருப்பூர், கரூர் மாவட்டத்தில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட தேக்க அணைகள் (செக் டேம்) உள்ளன.

இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், சோளம், வாழை போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள், சோளம், வாழை போன்றவைகள் பயிரிட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக அரசு கடந்த மாதம் 20-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் இடைவெளி விட்டு திறக்க உத்தரவு விட்டது.

கடந்த 3-ந்தேதி நிறுத்தப்பட்ட தண்ணீர், கடந்த 18-ந்தேதி கரூரை வந்தடைந்தது. இந்த தண்ணீரை பயன்படுத்தி சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் நேற்று மாலை 4 மணிக்கு அணையின் நீர்மட்டம் 72.95 ஆக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 161 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையில் 2616.33 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

மேலும் செய்திகள்