எதிரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல ஏறிய போது சிமெண்டு கூரை உடைந்து ரவுடியின் ஆதரவாளர் பலி

கொலையான ரவுடியின் ஆதரவாளர்கள்- எதிர் தரப்பினர் கத்தி, கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது தப்பி ஓட முயன்றபோது சிமெண்டு கூரை உடைந்து கீழே விழுந்து ரவுடியின் ஆதரவாளரான வாலிபர் பலியானார்.

Update: 2020-10-21 22:49 GMT
புதுச்சேரி,

புதுவை திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் திப்லான் (வயது24). ரவுடியான இவர் திருமணத்துக்குப் பின் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து பெயிண்டிங் வேலை செய்து மனைவி, குழந்தையுடன் திருந்தி வாழத் தொடங்கினார். இதனால் அவர் மீது கூட்டாளிகள் கடும் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் திப்லானை அவரது கூட்டாளிகளான சவுந்தரபாண்டியன் (23), தணிகாஷ் (24), கவுசி தாவீது (24), பாம் ரவி ஆகியோர் கடத்திச்சென்று தேங்காய்திட்டில் வைத்து அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினார்கள். கட்டையால் அடித்ததில் திப்லானின் கை, கால் முறிந்தது. குற்றுயிரும், குலையுயிருமாக அவரை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றனர். மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட திப்லான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாம் ரவி, சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது உள்பட 8 பேரை கைது செய்தனர்.

10 வாகனங்கள் உடைப்பு

இந்தநிலையில் திப்புராயப்பேட்டையில் திப்லான் கருமாதி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் அவரது வீட்டில் கூடியிருந்தனர். அப்போது திப்லானின் ஆதரவாளர்களுக்கும் அவரது எதிர் கோஷ்டியை சேர்ந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் தரப்பினருக்கும் நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் உடைத்து சூறையாடப்பட்டன.

சிமெண்டு கூரை உடைந்து சாவு

இந்த மோதலின்போது திப்லானின் உறவினரான திப்புராயப்பேட்டை சரவணன், குமரகுருபள்ளத்தை சேர்ந்த விமல்ராஜ் (23) ஆகியோரை எதிர்தரப்பினர் கத்தி, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டிச்சென்றனர். அவர்களிடம் சிக்காமல் இருக்க சரவணனும், விமல்ராஜும் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

அப்போது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய ஒர்க் ஷாப் சிமெண்டு கூரை மீது ஏறி விமல்ராஜ் தப்பிக்க முயன்றார். எதிர்பாராத விதமாக அந்த கூரை உடைந்து கீழே விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே விமல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன், மணி மாறன், கிரி, மதி, விக்கி, சாந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்