அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்: தி.மு.க. பலவீனமாக இருக்கிறது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. பலவீனமாக இருப்பதால் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-10-21 23:06 GMT
சென்னை,

தி.மு.க.வை பொறுத்தவரை அக்கட்சி பலவீனமாக இருக்கிறது. எனவே தான் அடிக்கடி ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இன்றைக்கு (நேற்று) கூட ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இது அக்கட்சியின் பலவீனத்தைத்தானே உணர்த்துகிறது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை நாங்கள் வலுவாகவே இருக்கிறோம். ஆரம்ப கட்டத்தில் இருந்தே மக்களோடு மக்களாக பயணிக்கிறோம். தேர்தல் நேரத்தில் தைரியமாக தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம். எங்கள் மேல் எங்களுக்கு 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. கட்சியும் அப்பாதையில்தான் நடைபெறுகிறது. ஆனால் தி.மு.க.வினருக்கு அந்த நம்பிக்கை இல்லையே.

40 பேரை சிறைக்கு...

சமூக வலைதளத்தில் ஆரோக்கியமான மீம்ஸ்கள் போடுவதில் தவறில்லை. ஆனால் அசிங்கமான, தரக்குறைவான, ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மீம்ஸ் போடுபவர்களை விடவே முடியாது. அப்படி தவறான மீம்ஸ் போட்டவர்கள் 40 பேரை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நானே சிறைக்கு அனுப்பி இருக்கிறேன்.

‘800’ படத்தில் நடிப்பதை கைவிடுமாறு விஜய் சேதுபதியை நாங்களும் வலியுறுத்தினோம். அவரும் ஆழமாக யோசித்து படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். ஆனால் அவரது குழந்தைக்கு தரக்குறைவான மிரட்டல் விடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அந்த மிரட்டல் விடுத்தவர் மனிதராக இருப்பதற்கே தகுதியற்ற ஜென்மம். அவர் இருக்கவேண்டிய இடமே சிறைதான். எனவே சம்பந்தப்பட்ட நபரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கித்தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

வேஷம் போடுகிறார்

‘மகாபாரதம் நமது முப்பாட்டனார் சரித்திரம்’, என நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். கமல்ஹாசன் திடீரென்று தன்னை நாத்திகன் என்பார், திடீரென்று ஆத்திகன் என்பார். அவர் பேசுவது யாருக்குமே புரியாது. அப்படித்தான் தனது கருத்துகளையும் அவர் தெரிவித்து வருகிறார். தற்போது தேர்தல் நெருங்குவதால் குறிப்பிட்ட மதத்தினரின் ஓட்டுகளை பெறுவதற்கு கூட அவர் இப்படி வேஷம் போடலாம். அதுதான் அவரது நிலை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்