டிராக்டர் மோதி பலியான தொழிலாளி உடலை உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டம்

டிராக்டர் மோதி பலியான தொழிலாளியின் உடலை, டிராக்டர் உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-21 23:25 GMT
கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பிரான் (வயது 45). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று தம்பிரான், தனது மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். கூவத்தூரை அடுத்த நெற்குணப்பட்டு கிராமம் அருகே வந்தபோது, பவுஞ்சூரை அடுத்த காதராப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த தம்பிரான், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை தம்பிரான் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிணத்துடன் போராட்டம்

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், தொழிலாளி தம்பிரான் உடலை, விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் உரிமையாளரான சங்கர் வீட்டின் முற்றத்தில் வைத்து நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன், ரேவதி மற்றும் மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி. கவினா, செய்யூர் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், டிராக்டர் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக அவரை கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளி உடலை அங்கிருந்து எடுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்