புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-22 09:27 GMT
புதுச்சேரி,

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

“புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,847 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 212 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.72 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,832 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,522 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தம் 4,039 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 195 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29,211 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,78,193 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்