மலைக்கிராம மக்கள் 1,434 பேருக்கு ரூ.4¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

மலைக்கிராம மக்கள் 1,434 பேருக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

Update: 2020-10-22 13:51 GMT
அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோனூர் கிராமத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி, நந்தகுமார் எம்.எல்.ஏ., ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் செல்வி மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று 1,434 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது.

அணைக்கட்டு தொகுதியில் உள்ள பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய கிராமங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 15 அரசு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க வந்துள்ளனர்.

மடையாப்பட்டு ஊராட்சியில் ரூ.28 லட்சத்தில் டிரான்ஸ்பார்மர் அமைத்து மலைப்பகுதிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சாலை வசதி இல்லாத உங்களுக்கு ஒடுகத்தூரில் இருந்து பீஞ்சமந்தை வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.5½ கோடியில் தார்சாலை அமைத்துத் தரப்படும்.

இந்த மலைப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று விரைவில் தொடங்கப்பட உள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து, உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக 90 சதவீதத்துக்கு மேல் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்த உங்களுக்கு தார் சாலை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

(அப்போது அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் குறுக்கிட்டு அரசு விழாவில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குக் கேட்கக்கூடாது, நான் பேசும்போது உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டேனா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர், அந்தக் கருத்தை வாபஸ் பெறுவதாக, கூறினார்).

அதைத்தொடர்ந்து நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசும்போது, அமைச்சர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக கூறியதால் 10 நாட்களாக இந்தச் சாலையை தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீரமைத்து வருகின்றனர். இதேபோல் ஆண்டுக்கு மூன்று முறை அமைச்சர் மலைக்கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க வர வேண்டும். அப்போதாவது இந்தச் சாலை இதேபோல் இருக்கும்.

மேலும் மழைக்காலங்களில் மின்சாரக் கம்பிகள் அறுந்து கீழே விழுந்து விட்டால், அதைச் சீரமைக்க ஒரு வாரம் எடுத்துக் கொள்கிறார்கள். எனவே அந்தப் பகுதியில் 110 கிலோ வாட் மின்சார டிரான்ஸ்பார்மரை அமைத்து, தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர், கலெக்டர் ஆகியோர் கோனூர் கிராமத்தில் இ-சேவை மையத்தையும், பீஞ்சமந்தையில் உள்ள புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அணைக்கட்டு தாசில்தார் சரவணமுத்து நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்