சிக்பள்ளாப்பூரில் தொடர் கனமழை: வீடு இடிந்து விழுந்து தந்தை-மகன் சாவு மேலும் 2 பேர் படுகாயம்

சிக்பள்ளாப்பூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்து தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

Update: 2020-10-23 21:57 GMT
சிக்பள்ளாப்பூர்,

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதேபோல, கடந்த சில தினங்களாக சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திலும் இடி-மின்னலுடன் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. மாவட்டத்தில் சிந்தாமணி, பாகேபள்ளி, சிட்லகட்டா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

மேலும் ஏராளமான பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சிந்தாமணியில் வீடு இடிந்து விழுந்து தந்தை-மகன் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

தந்தை-மகன் சாவு

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா விசாகூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 42). இவருடைய மனைவி முனிராஜம்மா. இந்த தம்பதியின் மகன் ராகுல் (15), மகள் ருச்சிதா. நேற்று முன்தினம் இரவு அவர்கள் 4 பேரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கினர். இந்த நிலையில் அந்தப்பகுதியில் இரவில் இருந்து இடைவிடாமல் கனமழை பெய்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை திடீரென்று வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீதும் விழுந்தது.

இதில் வீட்டின் இடிபாடுகளிடையே சிக்கி 4 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கிராம மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களால் உடனடியாக 4 பேரையும் மீட்க முடியவில்லை. இதுபற்றி அறிந்ததும் சிந்தாமணி போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளிடையே சிக்கிய 4 பேரையும் மீட்டனர். ஆனாலும் அதற்குள் ரவிக்குமாரும், அவருடைய மகன் ராகுலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். மேலும் முனிராஜம்மாவும், ருச்சிதாவும் பலத்த காயமடைந்தனர்.

எம்.எல்.ஏ. ஆறுதல்

இதையடுத்து போலீசார் படுகாயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிந்தாமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவம் பற்றி அறிந்ததும் நேற்று காலை சிந்தாமணி தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணாரெட்டி விசாகூர் கிராமத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முனிராஜம்மாவை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், வீடு இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும் கிருஷ்ணாரெட்டி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். வீடு இடிந்து விழுந்து தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்