தி.மு.க.வை சேர்ந்தவரை தாக்கி, வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 9 பேர் மீது வழக்கு

அரியலூரில் தி.மு.க.வை சேர்ந்தவரை தாக்கி வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாக, அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-25 03:35 GMT
அரியலூர், 

அரியலூர் காந்தியார் தெருவில் வசிப்பவர் டென்சி என்ற செல்வகுமார்(வயது 39). தி.மு.க.வை சேர்ந்தவரான இவர், கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் கதவு தட்டப்பட்டதால், அவர் கதவை திறந்து பார்த்தபோது அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் மற்றும் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் நின்றுள்ளனர்.

அவர்களிடம், அவர் என்னவென்று கேட்டபோது, அ.தி.மு.க. தட்டியை ஏன் கிழித்தாய்? என்று கேட்டுள்ளனர். அதற்கு, நான் கிழிக்கவில்லை என்று கூறிய செல்வகுமாரை, அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கி, வீட்டின் மீது கற்கள் மற்றும் பீர்பாட்டிலை வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை பார்த்த அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததால், அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

9 பேர் மீது வழக்கு

இது குறித்து அரியலூர் போலீசில் செல்வகுமார் புகார் செய்துவிட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், செல்வகுமாரின் வீட்டை பார்வையிட்டு அவரிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில் புகார் செய்து 12 மணி நேரம் ஆகியும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறி மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் மற்றும் தி.மு.க.வினர் அரியலூர் போலீஸ் நிலையம் முன்பு குவிய தொடங்கி, போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், செந்தில் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கைது செய்ய...

மேலும் ஆய்வுக்காக வந்த டி.ஐ.ஜி. ஆனிவிஜயாவிடம் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று சிவசங்கர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் அ.தி.மு.க. விளம்பர தட்டியை கிழித்து, கட்சியினரை தரக்குறைவாக பேசியதாக செந்தில் கொடுத்த புகாரின் பேரில் செல்வகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்