கடனை திருப்பி கொடுக்காததால் சாராய வியாபாரி வெட்டிக்கொலை 5 வாலிபர்கள் கைது

மரக்காணத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் சாராய வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-10-27 02:35 GMT
மரக்காணம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் உப்பளம் பகுதியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிள் ஒன்று நீண்ட நேரமாக நின்றது. இதனைப் பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மோட்டார் சைக்கிள் அருகில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் பிரம்மதேசம் அருகே தலைக்காணிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி (வயது 40) என்பது தெரியவந்தது. பிரபல சாராய வியாபாரி.

இவர் மீது மரக்காணம், பிரம்மதேசம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

5 வாலிபர்கள் கைது

பாரதி வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்ததால் அவரை கொலை செய்து வீசி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரித்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் பாரதியுடன் மரக்காணம், பிரம்மதேசம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பல சாராய வியாபாரிகள், கந்து வட்டிக்காரர்கள் பேசி இருப்பது தெரியவந்தது.

இதை வைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தனர். இதில் புதுவை தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த கணேஷ் (24), வெள்ளை என்ற சுரேஷ் (24), வினோத்குமார் (26), சதீஷ் (24), சந்தோஷ்குமார் (24) ஆகியோர் பாரதியை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கடன் தகராறு

விசாரணையில், சாராய தொழிலுக்காக கணேஷிடம் ரூ.4½ லட்சம், சுரேஷிடம் ரூ.2 லட்சம் என பாரதி கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தொகையை பலமுறை திருப்பிக்கேட்டும் கொடுக்காமல் பாரதி காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் பாரதியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று முன்தினம் கணேஷ், சுரேஷ், இவர்களது கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்து பாரதியிடம் நைசாக பேசி மதுகுடிக்க வருமாறு மரக்காணம் உப்பளம் பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கு மது குடிக்க வைத்து போதை தலைக்கேறியதும், கணேஷ், சுரேஷ் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து பாரதியை கத்தியால் குத்தினர். அவரது முகம், மார்பு, கைகளில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்