குட்டிகளுடன் திரிந்த யானை மோட்டார்சைக்கிளில் சென்றவர்களை துரத்தியது அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பினர்

ஆசனூர் அருகே குட்டிகளுடன் திரிந்த யானை மோட்டார்சைக்கிளில் சென்றவர்களை துரத்தியது. அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பினர்.

Update: 2020-10-29 05:36 GMT
தாளவாடி, 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் உள்ளன. சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி, ஆசனூர் பகுதி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து டிரைவர்கள் கரும்புகளை ரோட்டில் வீசி வருகின்றனர்.

இந்த கரும்புகளை தின்பதற்காக யானைகள் கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக மாநில எல்லையான காரப்பள்ளம் வன சோதனைச்சாவடியில் முகாமிட்டுள்ளன. கரும்பு தின்று பழகிய இந்த யானைகள் மைசூரூ தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் துரத்தி வருகின்றன.

துரத்தியது

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் தாளவாடியில் இருந்து ஆசனூருக்கு மோட்டார்சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது 2 குட்டிகளுடன் திரிந்த யானை ரோட்டை கடந்து சென்று கொண்டிருந்தது. மோட்டார்சைக்கிளில் சென்றவர்களை பார்த்ததும் அவர்களை நோக்கி ஓடி வந்தது. பின்னர் அவர்களை துரத்த தொடங்கியது.

இதனால் மோட்டார்சைக்கிளின் பின்னால் இருந்த ஒருவர் பயத்தில் இறங்கி ஓடினார். மற்றொருவர் மோட்டார்சைக்கிளை அங்கிருந்து சற்று வேகமாக ஓட்டிச்சென்று நிறுத்தினார். சிறிது தூரம் சென்றதும் அவர் யானைகளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். அதன்பின்னர் யானைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதைத்தொடர்ந்து 2 பேரும் மோட்டார்சைக்கிளில் சென்றனர். இதனால் இந்த 2 பேரும் யானைகளிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் செய்திகள்