குடிபோதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்கள் இயக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை
குடிபோதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்தார்.;
அரியலூர்,
அரியலூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்டரங்களில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
அரியலூர் மாவட்டத்தில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும். கனரக வாகனங்களில் தார்ப்பாய்கள் அமைக்காமல் செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
வேகத்தடைகள்
குடிபோதையில் மற்றும் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் இயக்கும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பஸ்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பயணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கூட்டத்தில் விபத்து நடைபெற வாய்ப்பு உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு வேகத்தடைகள் அமைப்பது, முக்கிய சந்திப்புகளில் ஒளிரும் பட்டைகள் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலை துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுந்தரமூர்த்தி, திருமேனி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராசு, அரியலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை அலுவலர்கள், சிமெண்ட் ஆலை அலுவலர்கள், கனரக வாகன உரிமையாளர்கள், 108 ஆம்புலன்சு வாகன அலுவலர் ஆகியோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். முடிவில் அனைவரும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலையில் அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற உறுதுணையாக நிற்போம் என்று உறுதிமொழி ஏற்று கொண்டனர்.