கோவையில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் சிக்கினர்

கோவையில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

Update: 2020-11-13 12:54 GMT
கோவை, 

கோவை மதுக்கரை போலீசார் மரப்பாலம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இதில் அந்த பையில் 1½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சூர் மாவட்டம் பாலாகி பரம்பு பகுதியை சேர்ந்த அகில் (வயது 20), தெற்குமுரி பகுதியை சேர்ந்த சாரோன் (20) என்பதும், கஞ்சாவை கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் 2 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கல்லூரி மாணவர்கள் 2 பேரும் ஆந்திரா மற்றும் தேனி மாவட்டத்தில் மொத்த வியாபாரிகளிடம் இருந்து கஞ்சாவை வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்றுள்ளனர். மேலும் அங்குள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்ததுள்ளது. மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

கோவையில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியதாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 பேர் கைதானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்