ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பி வழிகிறது காயல்பட்டினத்தில் கொட்டித்தீர்த்த கனமழை 215 மில்லி மீட்டர் பதிவானது

காயல்பட்டினத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு 215 மில்லி மீட்டர் மழை பதிவானது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பி வழிகிறது.

Update: 2020-11-18 18:47 GMT
தூத்துக்குடி, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கடந்த சில நாட்களாக பரவலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழையால் தூத்துக்குடி மாநகரமே தத்தளித்தது.

நேற்று முன்தினம் மதியத்துக்கு பிறகு மழை பெய்யாமல் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மழை வெளுத்து வாங்கியது. நேற்று காலையில் லேசான மேகமூட்டம் இருந்தது. காலை 11 மணி அளவில் வெயில் அடிக்க தொடங்கியது. மாலை 3 மணி முதல் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

தேங்கிய மழைநீரால் பாதிப்பு

நேற்று முன்தினம் பெய்த கனமழையால் தூத்துக்குடியில் பல இடங்களில் மழைநீர் குளம் போன்று தேங்கி கிடக்கிறது. தூத்துக்குடி மாநகரில் முக்கிய சாலையான திருச்செந்தூர் ரோட்டில் 3 நாட்களாக மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். அந்த பகுதியில் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி சங்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்துக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் சித்த மருத்துவ பிரிவு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகர், கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

தற்காலிக பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால், சேறும் சகதியுமாக பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காட்சி அளிக்கிறது. மேலும் மாநகர பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி உள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிரம்பி வழியும் ஸ்ரீவைகுண்டம் அணை

பலத்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் அணையை தாண்டி விழுந்து வினாடிக்கு 1,100 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. மேலும், இந்த அணையில் இருந்து மருதூர் மேலக்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீரும், கீழக்காலில் 400 கனஅடி தண்ணீரும், ஸ்ரீவைகுண்டம் வடகாலில் 1,093 கனஅடி தண்ணீரும், தென்காலில் 1,230 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தாமிரபரணி பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் பெய்த பலத்த மழை காரணமாக, ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பெரும்பாலான குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 3 வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்து உள்ளன.

மழை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 215 மில்லி மீட்டர் மழை பெய்தது. இது தவிர மற்ற இடங்களில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர்-91, குலசேகரன்பட்டினம்-77, விளாத்திகுளம்-48, காடல்குடி -46, வைப்பார்-26, சூரங்குடி-23, கோவில்பட்டி-39, கழுகுமலை-16, கயத்தார்-68, கடம்பூர்-70, ஓட்டப்பிடாரம்-31, மணியாச்சி-47, கீழஅரசடி-10.4, எட்டயபுரம்-76, சாத்தான்குளம்-49, ஸ்ரீவைகுண்டம்-65, தூத்துக்குடி-33.

மேலும் செய்திகள்